சேலம் மாவட்டத்தில் 1,242 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் நிறைவேற்றபடும் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஜவுளி பூங்கா, ஐடி பார்க் போன்றவை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” ஆகிய புதிய திட்டங்களை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனிடையே ரூ.38.53 கோடி மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு 168 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் 1,242 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டபணிகள் நிறைவேற்றபடும் என்று தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில், உருக்காலை, ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் பட்டியலிட்டார். இதனைதொடர்ந்து, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் 54.01 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில்,மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இத்திட்டம் வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி, வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.மேலும் மாநில அளவில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயற்கை வள மேலாண்மைப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நகர்ப்புற இடத்தை பசுமைப்படுத்துதல்,சமூக மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுச் சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பசுமை மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்வது என நகர்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
