“மக்களால் நான் மக்களுக்காகவே நான்...” என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறி வந்த மந்திர வார்த்தைகளை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கண்முன் காட்டி வருகிறது. கொரோனா காலத்திலும் தோய்வில்லாமல் அரங்கேறி வரும் மக்கள் நலத்திட்டங்களே அதற்கு சரியான சாட்சிகளாக அமைத்துள்ளன. கொரோனா காலத்தில் முதலமைச்சர் எடப்பாடியாரின் அறிவுறுத்தலின் படி களத்தில் இறங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குழுவால்  தமிழக மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். 

அண்டை மாநிலங்கள் கொரோனாவிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் இதே சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ எவ்வித அச்சமும் இன்றி களத்தில் இறங்கி மக்களுக்காக ஆயிரக்கணக்கிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தூள் கிளப்பி வருகிறார். தமிழகம் முழுவதும் அதிமுக அரசின் மக்கள் நல திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று கரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

கரூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடியாருக்கு போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்  வண்ணமயமாக வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளார். கரூரில் திரும்பிய பக்கமெல்லாம் எடப்பாடியாரின் கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகள் என திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது. முதல்வரின் திருவுருவப்படத்தை கையில் ஏந்திய படி சாலையின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். சாமானிய மக்கள் கூட கொரோனா விதிமுறைகளின் படி முறையாக மாஸ்க் அணிந்து முதலமைச்சரைக் காண கூடியிருந்தனர்.


அதுமட்டுமின்றி ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என கரூர் நகருக்குள் நுழைந்தது முதல் விழா நடைபெறவிருந்த கலெக்டர் அலுவலகம் வரை தமிழர்களின் பாரம்பரிய இசையுடன் முதல்வருக்கு தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  ஊர் முழுவதும் அலங்கார வளைவுகள், பேனர்கள், கட்-அவுட்கள் வைத்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவை அனைத்தையும் ரசித்தபடியே, திறந்தவெளி வேனில் நின்ற படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் தொகுதி மக்களை வணங்கிய படி சென்றனர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ரூ.627 கோடி மதிப்பீட்டில் 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு  அடிக்கல் நாட்டினார். அதேபோல் கரூரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை , நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் ரூ.118.53 கோடி மதிப்பில் நிறைவுற்ற நலத்திட்டங்களை திறந்து வைத்தார். 


மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனிவுடன் அவரிடம் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். கரூர் வந்த முதலமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பை பார்த்து அதிமுகவினரே அசந்து போயுள்ளதாக உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.