முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நேற்று தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நாளை முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. 

அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒருநாளைக்கு 10 தொகுதிகள் வீதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடும் வெயிலிலும் ஓய்வின்றி பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படி கொரோனா நெருக்கடி காலத்திலும் கடந்த சில மாதங்களாகவே கடும் பணிகளை மேற்கொண்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.