தமிழகத்தில் மத அமைதியை குலைக்க யார் முயற்சி செய்தாலும் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றும், அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 4-ம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.  இன்று காவிரி விவகாரம் தொடர்பாக  காரசார விவாதம் நடைபெற்றது.  அதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் , காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்..

 இதைத் தொடர்ந்து மதுரையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில் மதுரை சிக்கந்தர் சாவடி, கூடல்நகர், கூடல்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும், இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்  என்றும் தமிழகத்தில் மத அமைதியை குலைக்க யார் முயற்சி செய்தாலும் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றும், அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில்ளித்தார்.