சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் தலைமைச் செயலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  

சென்னையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் பேசினார். அதில், தலைமைச் செயலகம் செயல்படும் சென்னை கோட்டையை மனித வெடிகுண்டு மூலம் தாக்கி தகர்ப்போம் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வீடுகளிலும் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறிய அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து, உடனே காவல் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகம் உள்ள கோட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோட்டை வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியோடு சோதனையில் ஈடுபட்டனர். 

அதேபோல், சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.  இதனையடுத்து, செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.