பாஜக ஆளும் மாநிலமான ஜாக்கண்ட்டைவிட தமிழகத்தில் குறைவான விலையில் தான் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், அதனால் முட்டை வாங்கியதில் ஊழல் என்று பொய் பிரச்சாரம் செய்வதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷா , இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழல் மலிந்த மாநில  என குற்றம்சாட்டினார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதல் செய்ததில் 5000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக பெரிய குண்டை தூக்கிப் போட்டார்.

பொன்னாரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயகுமார், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் மேட்டூர் அணையை திறப்பதற்காக சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முட்டை கொள்முதல் செய்தததில் ஊழல் நடந்ததாக மத்திய அமைச்ச்ர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் உண்மை என்னவென்று தெரியாமல் பேசியுள்ளதாக கூறினார்.

மொத்தமே முட்டை கொள்முதல் செய்ய 5000 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி 5000 கோடி ஊழல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் சத்துணவில் வழங்குவதற்காக முட்டை கொள்மதல் செய்யப்டுகிறது.இதில் ஒரு முட்டை 4 ரூபாய் 34 காசுகளுக்கு வாங்கப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்கண்டில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு முட்டை5 ரூபாய் 38 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் எந்த மாநிலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை பாஜகவினரே உணர்ந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். இளிமேல் இது போன்று பொய் பிரச்சாரங்கள் செய்வதை பாஜக நிறுத்திக்  கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடியார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.