கூவாத்தூரில் வெளியேறியது முதல் வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் வரை அதிமுகவுக்கு எதிராக ஆர்ப்பரித்து வந்த கருணாஸ் தீடீர் திருப்பமாக வாலண்ட்ரியாக வண்டியேறி தானாக தானாக சரண்டராகி இருக்கிறார் கருணாஸ். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக அறியப்பட்ட கருணாஸ் இந்த சந்திப்புக்கு பிறகு யார் பக்கம் என்பதையும் விளக்கியுள்ளார்.  

 

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக அரசையும் வன்மையாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன. இதனால் வெறுப்பான கருணாஸ் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ பதவியை நீக்கவும் சபாநாயகர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார் கருணாஸ். அடுத்த  திருப்பமாக  சபாநாயகருக்கு எதிரான நோட்டீஸை திரும்பப் பெற்றார். இப்போது எடப்பாடியை சந்தித்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்திப் இருக்கிறார். இந்நிலையில் எதற்காக எடப்பாடியை சந்தித்தேன் என விளக்கியுள்ளார் கருணாஸ். 

‘’சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் சிலை, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது, தொகுதி குடிநீர் பிரச்னையை தீர்ப்பது,  திருவாடனை கண்மாய்களை தூர்வாருவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் மனு அளித்தேன். எனது தொகுதி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. எனது சந்திப்பு என் சமூக ரீதியான கோரிக்கைகளை முன் வைக்கவே. காழ்ப்புணர்ச்சி பார்க்காமல் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியே முதல்வரை சந்தித்தேன். அரசியல் சாசனப்படி அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட்டு வென்றேன். ஆகையால் முதல்வரை ஒரு எம்.எல்.ஏ என்கிற முறையில் சந்த்தித்து கோரிக்கைகளை வைத்தேன். டி.டி.வி.தினகரன் எனது உறவினர். அவருக்காக நான் கவர்னர் வரை சந்தித்து வந்திருக்கிறேன்’’ என நழுவி இருக்கிறார் கருணாஸ். 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் கருணாஸ், திமுக நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.