முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், 20 தொகுதிகளை பிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறிக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். 

இதுதொடர்பான விளக்கத்தை சபாநாயகர் தனபால், புகார் மனு அளித்த 19 எம்எல்ஏக்களிடம் கேட்டார். அதில், எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் தனது விளக்கத்தை அளித்தார். மற்ற எம்எல்ஏக்களுக்கு அவகாசம் கொடுத்தும், அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக 18 எம்எல்ஏக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என கூறி தீர்ப்பளித்தார். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுடன் சேர்ந்து 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் 18 எம்எல்ஏக்களும், உச்சநீதிமன்றத்தில், 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். என மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. 

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் போட்டியிடுவது, 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை எதிர்க் கொள்வது. குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.