தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள். இதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கருப்பக் கவுண்டர் - தவசியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் அடியெடுத்து வைத்தார். அவரது மறைவுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததன் காரணமாக முதன்முதலாக 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெ அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பலமுறை சட்டமுன்ற உறுப்பினாராக பதவிவகித்த இவர், பாராளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றுள்ளார்.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அமைச்சரான பழனிச்சாமி தொடர்ந்து இரண்டாம் முறையாக 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகும் அமைச்சராக நீடித்தார். அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடையவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 60 நாட்களுக்கும் மேலாக முதல்வர் பதவியில் நீடித்து அவர் அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்களினால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார். அது முதல் தற்போது வரை சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி நீடித்து வருகிறார். அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பழனிச்சாமி இருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று 66வது பிறந்தநாள். இதற்காக பிரதமர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராதா என்கிற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.