அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செயற்குழுவில் இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதிக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிக்க அதிமுகவில் நாள் குறித்துள்ளார்கள். அதிமுகவிலிருந்து வரும் தகவல்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே வர வேண்டும் என்று பெரும்பாலான அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருக்கிறார் என்று அவருடைய  தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 
கடந்த 4 நாட்களாக தேனியில் முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள் பலரையும் சந்தித்தார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட ட்வீட்டர் பதிவு குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார். நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இறங்கி வர வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் இருவரிடமும் வலியுறுத்திவருகிறார்கள். ஓபிஎஸ் விரும்பியபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க முதல்வர் ஈபிஎஸ் இறங்கிவருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் குறுக்கே நிற்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே, இன்று அதிமுக நிர்வாகிகள் இடையே நடக்கும் ஆலோசனைகளைப் பொறுத்து நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.