அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. எதிரில் இருக்கும் திமுக கூட்டணி தோல்வியை தழுவும் கூட்டணி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- எங்கள் கூட்டணியின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். எங்கள் கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. அதனால் எங்கள் கூட்டணியை ரஜினி ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. எதிரில் இருக்கும் திமுக கூட்டணி தோல்வியை தழுவும் கூட்டணி.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பது பற்றி தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியுடன் தொடர்ந்து இருக்கும். எங்கள் கட்சியின் பலத்திற்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதியைப் பெற்றுக் கொள்வோம். பாஜகவைத் தவிர எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள் தர வேண்டும் என அறிவிக்கவில்லை.

ரஜினி அரசியலுக்கு வராதது அவரது உடல் நலத்திற்கு நன்மை. தமிழகத்தில் தமாகா இளைஞர் அணியின் கூட்டம் 2 இடங்களில் நடைபெறும். அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதே தமாகாவின் தலையாயப் பணியாக இருக்கும்.  தமிழக சட்டப் பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எனது முதல்பணி. ரூ. 2500 பொங்கல் பரிசு வழங்குவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது தோல்வி பயத்தையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.