சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட  4 அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை  முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 7-ம் தேதியான நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனிதனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளனர்.  நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனையில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.