முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மவுனம், சம்மதம் என்றுதான் அர்த்தம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தேசிய ஜனநாயக  கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?  என்று கேள்வி  எழுப்பினர். அதற்கு எங்களது கட்சிக்கு என சில வழிமுறைகள்  உள்ளன. அதன்படி கட்சியின் தலைமை தான் அனைத்தையும் அறிவிக்கும். அதை தான்  மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ;- நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று சொல்லித்தான் தேர்தலை சந்தித்தோம். தற்போது வருவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். தற்போதய முதல்வர் தான் முதல்வர் வேட்பாளர் என்ற இலக்கோடு தேர்தலை சந்திக்கிறோம். ஊடகத்தினர் கேள்விக்கு அவர் அமைதியாகச் சென்றார் என்றால், நாங்களும் எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இங்குள்ள பாஜக நிர்வாகிகள் சொல்லும் கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. திமுகவினருக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வர் தலைமையில் நடந்த கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி ஒன்றியத்தின் வாயிலாக நடத்த வேண்டும். இவர்கள் சட்டத்தை மீறுகின்றனர். திமுகவினரை போன்று ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் நடத்தினால் ஊரின் ஒற்றுமை என்ன ஆகும் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.