அதிமுக தொண்டர்களின் உழைப்பின் வேகத்தில்  திமுகவின் சூழ்ச்சிகள் தூள் தூளாகி விடும் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். 

அதிமுக  சார்பில் கோவை ஈச்சனாரியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கோவை புறநகர், கோவை மாநகர் மாவட்ட கழகங்களின் சார்பில் தேரதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும,  சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். பின்னர் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:  வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை எதிர்கொள்ள இன்னும் 6 மாத காலம் இருக்கிறது.  அதற்கு இப்போதே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித குழப்பமும் இல்லாமல் அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்த கழகத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளார். 

அம்மா அவர்களின் ஆணைப்படி  நூறாண்டு காலம் தமிழக மக்களுக்கு அதிமுக சேவை செய்யும், மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும், ஜனநாயக ரீதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு இவர்தான் தமிழக முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட ஒரே இயக்கம் அதிமுகதான். மக்களின் தேவைகளை அறிந்து மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. யாரும், எப்போதும், எவரும் சந்திக்க கூடிய எளிமையான முதல்வர் எடப்பாடியார்தான். அம்மா அவர்கள் உயிரோடு இருந்தபோது சட்டமன்றத்தில் திமுகவை பார்த்து நீங்கள் இனி ஒருபோதும் ஆட்சியில் அமர முடியாது என சூளுரைத்தார். அம்மாவின் விருப்பப்படி 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாவுமணி அடிக்க வேண்டும். 

அதிமுக தொண்டர்களின் உழைப்பின் வேகத்துக்கு முன்னாள் திமுகாவின் சூழ்ச்சி தூள் தூளாகி விடும். மக்களின் அனுமானத்தை பெறுவதற்கு தீவிரமாக செயல்பட வேண்டும். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பிரதிநிதி தமிழக முதல்வர் வேட்பாளராக இருக்கிறார், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்கக்  கூடிய திறமை கொண்ட எஸ்.பி வேலுமணி நம்மிடம் உள்ளார். நமக்கு எதிரியே திமுக தான், நாம் உறுதியாக நின்று திமுகவை துரத்தியடிக்க வேண்டும் என்றார்.