ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதைக்குத் தேவையில்லை என்பதால், ஆலையை மூடிவிடலாம் என கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாகத் திறக்கப்படாது எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளார் என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நகரப் பேருந்து சேவையை தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி ;- ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாகத் திறக்கப்படாது எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளார். சென்ற ஆட்சிக் காலத்தில் கொரோனா நோய்ப் பரவலின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த ஓரே காரணத்தால், அந்த ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மட்டும் திறக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், அவர்கள் கூறிய அளவுக்கு ஆக்சிஜன் தர முடியாவிட்டாலும், தூத்துக்குடி, நெல்லை உள்ள மக்களுக்குப் பயன்படக்கூடிய அளவுக்கு அங்கே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதை தெளிவாகத் தமிழக அரசு தன் வாதத்தின் வழியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது. அதனால் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதைக்குத் தேவையில்லை என்பதால், ஆலையை மூடிவிடலாம் என கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது கேரளாவில் 3வது அலைக்கான அறிகுறி தெரியும் முன்பே தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்கத் தொடங்கி விட்டார் என்றாா்.