close all sand quaries in tamilnadu...madurai high court order
தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் இழுத்து மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆறுகளையும், இயற்கை வளங்களையும் சீரழிக்கும் மணல் குவாரிகள் தமிழகத்தில் மூடப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் ஏராளமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள மணலை லை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நிதிமன்ற மதுரை கிளையில் புதுங்ககோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் , மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும் என்றும் புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.
.மேலும் தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்….. மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்… என பல அதிரடி உத்தரவுகளை நீதிபதி மகாதேவன் பிறப்பித்தார்.

சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி மகாதேவன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
