அதிமுகவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் மனசாட்சி இல்லாமல் பாஜகவோடு ஓடுகின்றனர். அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறி இருக்காது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பேராட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதில், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் நேற்று அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்;- இந்தியாவில் 40 ஆண்டுகால இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சனைக்கும் பாஜக தீர்வு காணவில்லை. அதற்கு பதிலாக முத்தலாக் பிரச்சனையை கையில் எடுத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. அதன் பின்னர் காஷ்மீர், அசாம் மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் பாஜக கையிலெடுத்து மக்கள் மீது தொடர்ச்சியாக சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்தது, தற்போது நான்காவது சம்மட்டி அடியாக குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார். 

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என பகிரங்கமாக ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஒரு கேவலமான அரசியல் நிலை உள்ளது. அதிமுகவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் மனசாட்சி இல்லாமல் பாஜகவோடு ஓடுகின்றனர். அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் குடியுரிமை திருத்த மசோதா கானல் நீராய் போய் இருக்கும். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் செய்தது வரலாற்றுத் துரோகம். அந்த துரோகத்தை ஒருபோதும் யாரும் மறக்கக்கூடாது.

இந்த வரலாற்றுத் துரோகத்தை நிதிஷ்குமார் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி செய்தார். தற்போது அதை அவர் மனசாட்சி உறுத்தியதால் மறுபரிசீலனை செய்து உள்ளார். அதிமுகவிற்கு மனசாட்சி உறுத்தவில்லை; மனசாட்சி இருந்தால் தானே உறுத்தும், மனசாட்சி இருந்தால் தானே மறுபரிசீலனை செய்யும், தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை பார்த்தாவது அதிமுக மனசாட்சி உறுத்தும் என நம்புகிறேன் என்று ஆவேசமாக ப.சிதம்பரம் பேசியுள்ளார்.