ஒவ்வொரு தேர்தலிலும் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் கட்சிகளின் சார்பாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் களமிறங்குவது வழக்கம். இந்த முறையும் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் களத்தில் உள்ளார்கள்.

 
நடிகர் மன்சூர் அலிகான்
தமிழ்ப் படங்களில் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய மன்சூரலிகான்  திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். அவர் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதற்கு முன்பு மன்சூரலிகான் 1999-ல் தேனி தொகுதியில் புதிய தமிழகம் சார்பிலும் 2009-ல் திருச்சியில் சுயேட்சையாகவும் களமிறங்கி தோல்வியடைந்தவர்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி காமெடி நடிகராக மாறியவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இந்திய குடியரசுக் கட்சி அ பிரிவு சார்பில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.


பாடலாசிரியர் சினேகன் 
சினிமாவில் பாடல்களை எழுதிவரும் பாடலாசிரியர் சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். தற்போது அவர் அக்கட்சி சார்பாக அவருடைய சொந்த ஊரான சிவகங்கை  தொகுதியில் களமிறங்கி உள்ளார். சினேகன் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
இவர்களைத் தவிர பிசாசு படத்தில் பாடல் எழுதிய கவிஞர் தமிழச்சி தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கி உள்ளார். கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய நடிகர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும்  நடிகர் ஜெ.கே. ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியிலும் வெற்றி பெற்றார்கள். மக்களவைத் தேர்தலில் கடைசியாக திரை உலகைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றது அப்போதுதான். இந்த முறை யாராவது நாடாளுமன்றம் செல்வார்களா என்பது மே 23 அன்று தெரிந்துவிடும்.