மதத்தின் பெயரால் பாதிக்கப்படும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் பின்னால் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘’ராமரை சொல்லிக்கூட ஆட்சிக்கு வரமுடியவில்லை. பாபர் மசூதியை இடித்த பிறகுதான் பாஜக ஆட்சிக்கு வரமுடிந்தது. 1984ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்கள் பெற்ற உறுப்பினர் எண்ணிக்கை வெறும் இரண்டு. 8 ஆண்டுகளுக்கு பிறகு பாபர் மசூதியை இடித்து தள்ளிய பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர்கள் மிகப்பெரிய சக்தியாக மாறுகிறார்கள். எதிர்கட்சி அந்தஸ்தை பெறுகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக அரசியல் செய்தால் தான் மதவெறியை இங்கு ஊட்டி வளர்க்க முடியும், முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டால் மட்டும் தான் இந்துக்களை அணி திரட்ட முடியும். அப்படித்தான் நமக்கு ஓட்டுக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறார்கள். 

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அவர்கள் நிறுத்திய 300 வேட்பாளர்களில் ஒரே ஒரு வேட்பாளர்கூட முஸ்லீம் வேட்பாளர் கிடையாது. மிக வெளிப்படையாக முஸ்லீம்களை எதிராளியாக கருதினார்கள். சிறுபான்மை ஓட்டுக்கள் வேண்டாம். எங்களுக்குத் தேவையில்லை. பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுக்கள் போதும் என்கிற நிலைப்பாட்டை பாஜக எடுத்து விட்டது. ஆகவே எல்லா நடவடிக்கைகளிலும் முஸ்லீம் வெறுப்பை ஒரு அரச யுக்தியாக பாஜக கடைபிடித்து வருகிறது. 

அந்த வகையில்தான் மதத்தை அளவுகோளாக வைத்து சிஏஏ சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டும் இல்லை என்கிற ஒரு முடிவை துணிச்சலாக எடுக்கிறார்கள். ஆகையால் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியலைமைப்பு சட்டம் 5, 10, 14, 15 ஆகிய பிரிவுகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சமத்துவத்தை பேசுகிறது. முஸ்லீம் வெறுப்பு ஒருபுறம். அதைவிட முக்கியமான தொலைநோக்குத்திட்டம் இருக்கிறது. இந்தகோணத்தில் பார்த்தால்தான் அனைத்து தரப்பு மக்களும் வீதிக்கு வந்து போராட முடியும். 

சாதியின் பெயரால் பாதிக்கப்படும் இந்துக்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். மதத்தின் பெயரால் பாதிக்கப்படும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் பின்னால் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறோம். எப்போதும் பாதிக்கப்படுபவர்களின் பின்னால் இருப்பது தான் பெரியாரின் அரசியல். அம்பேத்கரின் அரசியல்’’என அவர் தெரிவித்துள்ளார்.