அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மற்றும் மோடிக்கு எதிராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள், இடது சாரிகள் என அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பாக நேற்று ராகுல் காந்தி, சரத்பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப்  பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாஜக தொடர்ந்து அராஜகங்களை அரங்கேற்றி வருவதாகவும், எப்படி எல்லாம் மாநில அரசை ஆட்டி வைக்கிறார்கள் என்பது குறித்தும் புட்டுப்புட்டு வைத்தார்.

அவர் பேசும்போது, தமிழ்நாட்டைப் பார்த்திருப்பீர்கள், ஜெயலலிதா மறைந்த பிறகு 19 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதற்கு முன்பு அவர் சுத்தமானவராக கருதப்பட்டார். ஜெயலலிதாவும், சசிகலாவும் ஊழலில் ஈடுபட்டார்களா?இல்லையா ? என்பது குறித்து நான் பேசவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அரசியல் ரீதியாக பாஜக எப்படி செயல்படுகிறது என்பது தான் இங்கு முக்கியம்.

தமிழகத்தில் இரட்டை இலை பிரச்சனை குறித்து அனைவருக்கும் தெரியும். அந்த சமயத்தில் தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தாக தாக்குதல் நடத்தினார்கள். அந்தப் பிரச்சனையை பாஜக அரசு அரசியலாக்கியது.

தமிழகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா ? தமிழ்நாட்டை மத்திய அரசு ஒவ்வொரு நிமிடமும் ஆட்டுவிக்கிறது. அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது. இதனால் தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வருகிறது.

தமிழகத்தில் ஆளுநர்களைக் கொண்டு பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பத்திரிக்கையாளர் யாரும் இதை கவனிப்பதில்லை. தற்போது இந்த ஊடகத்தின் வாயிலாக நான் கூறிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். இந்த தருணத்தில் இருந்து பாஜகவை நான் முழுமூச்சாக எதிர்ப்பேன், அதன் அராஜகங்களை  தோலுரித்துக் காட்டுவேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், இனி பாஜவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என சந்திர பாபு நாயுடு உறுதியாக தெரிவித்தார்.