இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில், எல்லை விவகாரம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமானது எனவும், அது குறித்து தான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை எனவும் இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இந்தியா சீனா இடையேயான பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம்  நீடித்து வருகிறது, கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது, ஆனால் சீனா அதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அச்சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்தது.  எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் உருவானது, அதற்கிடையில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லையில் இருந்து படைகளை பின்வாங்குவது என்ன முடிவெடுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்கினாலும் கொர்கான், ஃபிங்கர்-4 பகுதி, பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்க மருத்து வருகிறது. 

இந்நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு இந்திய எல்லையில் சீனா அத்துமீற முயற்சி செய்து அதை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளார். ஒருபுறம் எல்லையில் சீனா படைகளை குவித்து வரும் அதே நேரத்தில்,  ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 7 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில்,  இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட முடிவுகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் ஆன்லைன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் கூறியதாவது: இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான ரகசியம், அதை நான் பொதுவெளியில் கூற விரும்பவில்லை. மேலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முன்கூட்டியே நாம் யூகிக்க முடியாது என்றார். 

அதேநேரத்தில் திபெத்தின் நிலைமை மற்றும்  கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டபோது  அதற்கும் அவர் பதில் கூற மறுத்துவிட்டார். ஆனால்,  எல்லையில் அமைதியை நிலைநாட்ட 1993 முதல் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதிலிருந்து இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன என்று கூறினார். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எல்லையில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தின் சூழலை உருவாக்காமல் இருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை பின்பற்றாமல் போவது போன்ற விஷயங்களே இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.