இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம்  கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் மறுபுறம் திடீரென சீன ராணுவ வீரர்கள் சிக்கிமில் உள்ள நகுலா பாஸ் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்ததால் 20 சீன வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும், அதில் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கிற்கு கிழக்கே உள்ள பாங்கோங் த்சோ ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது சீன வீரர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில்  இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததைத் தொடர்ந்து இரு  நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இருநாடுகளும் படைகளை எல்லையில் இருந்து திரும்ப பெற வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ட காரணிகளை முன்வைத்து அப்பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான 9-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ளது. சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அந்த பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து துருப்புகளை அகற்ற சீனா மறுத்துவருவதாக 
இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஆனாலும் சீனா விரைவில் பின்வாங்கும் என்று நம்புவதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பேச்சுவார்த்தை நடந்து முடிந்த சில மணி நேரங்களில் மீண்டும் சீன ராணுவத்தினர் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா பாஸில்  ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினர் எல்லை வழியாக சீனர்கள் ஊடுருவுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் சீன வீரர்கள் ஊடுருவலை கைவிடாமல் முன்னேற முயன்றனர். அப்போது திடீரென அவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்   தயாராக இருந்த இந்திய  வீரர்கள் சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்து விரட்டி அடித்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 20 சீன வீரர்கள் காயமடைந்தனர். அதில் இந்திய வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். இத்தகவலை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் சீனா ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனா ஊடுருவல் முயற்சியால் சிக்கிம் எல்லையில் புதிய பிரச்சினை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஜனவரி 8ஆம் தேதி சீன வீரர் ஒருவர், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்று இந்திய ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் கிழக்கிலுள்ள  பாங்கொங் த்சோ ஏரியின் தெற்கு பகுதியில் நடந்தது. ஆனால் பிடிபட்ட சீன வீரரை இந்தியா இரண்டு நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியது. தனது சிப்பாய் தற்செயலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக சீனா விளக்கம் அளித்தது. அதேபோல் முன்னதாக அக்டோபரில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ஊடுருவி இருந்தனர், அப்போதும் அவர்களையும் இந்திய வீரர்கள் டெம் சோக் கரையில்  தடுத்து வைத்திருந்தது. பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி சுசில்  மோல்டோ வில்  நடந்த பேச்சுவார்த்தையின் போது சீன அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது இந்திய ராணுவத்தின் இரண்டு நாள் காவலில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.