இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அதைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. ஆனாலும் சீனா எல்லையை ஒட்டி, டோக்லாம் அருகே அணுகுண்டு வீச்சு மற்றும் ஏவுகணைகளை நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா  போருக்கு சீனா வேகமாக ஆயத்தமாகி வருவதையே இது காட்டுவதாக உள்ளது.

இந்திய-சீன எல்லையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் இந்தியா எல்லையில் அத்து மீறி விட்டதாக கூறி சீனா தனது படைகளை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் குவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன படையினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையிலிருந்து படைகளை பின்வாங்க ஒப்புக் கொண்டன. 

ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா படைகளை திரும்பப் பெற்றாலும், விரல் பகுதி, கோக்ரா, மற்றும் பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை பின் வாங்க சீனா மறுத்து வருகிறது. இதற்கிடையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் இந்திய எல்லைக்குள் சீன அத்துமீற முயற்சித்து அது தோல்வியில் முடிந்துள்ளது.  இதற்கிடையில் எல்லைப் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆறு கட்ட பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், படைகளை பின்வாங்குவது என்பது ஒரு சிக்கலான செயல், அது இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தொடர வேண்டும் என கூறியுள்ளது. 

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள வெளியூறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, எல்ஐசியின் தற்போதைய நிலைமையை  ஒருதலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகளில் சீனா ஈடுபடமுடியாது என்றார். அதே நேரத்தில் கிழக்கு லடாக்கில் எல்ஐசி மீதான பதற்றத்தை குறைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் சீனா சுமார் 1,150 கிலோ மீட்டர் தூரத்தில் ஆயுதங்களை குவித்து வருகிறது. இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், சீனா படைகள் குவிப்பை நிறுத்தவில்லை. சீனா தனது  எச்-6 அணுகுண்டு மற்றும் ஏவுகணைகளை பூட்டானை ஒட்டியுள்ள டோக்லாமில் அதிக அளவில் நிறுத்தி வருகிறது. இந்திய எல்லையிலிருந்து சுமார் 1,150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோள் மட் விமான தளத்திற்கு சீனா இந்த ஆயுதங்களை அனுப்பி வருகிறது.  எல்லைப் பிரச்சனை தீர்க்க இந்திய-சீன கார்ப்பஸ் கமாண்டர்ஸ் இதுவரை 6 முறை சந்தித்துள்ளனர். முக்கிய தளபதிகள் கூட்டத்திற்கு பிறகு இரு தரப்பினரும் எல்ஐசியில் தற்போதைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியா எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள எச்சரிக்கையாக உள்ளது.

சீனா படைகளை பின்வாங்குவதற்கான தெளிவான அறிகுறிகள் வரும் வரை, நமது வீரர்கள் பாங்கொங் த்சோவின் உயரமான மலைகளில் தங்கியிருப்பார்கள் என்பதில் இந்திய ராணுவம் திட்டவட்டமாக உள்ளது. மறுபுறம் இந்தியாவும் சீனாவும் ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  இதற்கிடையில் எல்லைத் தகராறு ஒரு பெரிய பிரச்சனை, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தேவைகளை புரிந்து கொள்வது அவசியம், இப்பிரச்சனைக்கு இந்தியாவும் சீனாவும் இணைந்து தீர்வு காண வேண்டும் என உலகப் பொருளாதார மன்றத்தின் இணையதள மாநாட்டில் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

அதே நேரத்தில் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இரு நாடுகளும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவும் சீனாவும் சிக்கலில் இருப்பதை நன்கறிவேன் ஆனால் அவர்கள் சர்ச்சைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் விரும்பினால் என்னால் உதவ முடியும் என அவர் கூறியுள்ளார்.