பல ஆண்டுகளுக்கு முன்  தொழில்துறையில் ஜாம்பவானாக இருந்த அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடம் கடனை வாங்கி குவித்தார். 

ஒரு கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சரிவை சந்திக்க தொடங்கியது. இதனால் அந்நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடன் கொடுத்த வங்கிகள் கடனை திரும்ப கேட்டு குடைச்சல் கொடுக்க தொடங்கின. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு பல பத்தாயிரம் கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் கடன் சுமையை தாங்க முடியாத அனில் அம்பானி தனது நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். தற்போது அந்நிறுவனம் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஐ.சி.பி.சி., சீனா டெவல்ப்மெண்ட் பேங்க் மற்றும் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் பேங்க் ஆப் சீனா ஆகிய 3 வங்கிகளும் பாக்கி தொகையை (சுமார் ரூ.5 ஆயிரம் கோடி) தருமாறு அனில் அம்பானிக்கு எதிராக   லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று  நடந்தது. அப்போது அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கடன் கொடுத்த வங்கிகள் (சீன வங்கிகள்) அனைத்துக்கும் அல்லது குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

செலுத்த வேண்டிய தொகையை இறுதி செய்வதற்கான விசாரணை பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.