சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் காவல் துறை டிஜிபி, சென்னை காவல் துறை ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்தும், தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்காளர்களை பண மழையில் நனைத்துள்ள வேட்பாளர் குறித்தும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என, டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜெய்தீயுடன் ராஜேஷ் லக்கானி மற்றும் தேர்தல் அதிகாரிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த வேளையில் தலைமை செயலாளரின் ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வரும் 12 ஆம் தேதி ஆர்கே நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை இன்று அல்லது நாளைக்குள் ஒத்திவைப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.