தலைமை செயலாளர் பதிவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலம் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 3வது முறையாக 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு  உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், (மறுநாள்) ஜூலை 1ம் தேதியன்று புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். இவரை விட 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால், தலைமை செயலாளராக சண்முகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் பணிக்காலம் வரும் ஜனவரி 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதம் சண்முகத்தின் பணிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே 2 முறை அவரது பணிக்காலத்தை நீட்டித்துள்ள நிலையில் மேலும், மூன்றாவது முறையாக தலைமை செயலாளர் சண்முகத்தின் பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.