இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் இருந்தாலும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருந்தாலும், கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதுடன், தொற்றுவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து மேலும் பரவாமல் தடுக்க, தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. 

கொரோனா தொற்று தமிழ்நாட்டில் ஆரம்பித்த சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தினமும் செய்தியாளர்களை சந்தித்து அப்டேட் செய்துகொண்டிருந்தார். அதன்பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் செய்தியாளர்களை சந்தித்து பேசிவந்தார். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதன்பின்னர் பீலா ராஜேஷ் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துவந்தார்.

சிறுமி ஒருவர் பீலா ராஜேஷை போலவே உடையணிந்து கொண்டு பேசிய வீடியோ வைரலானது. குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு பீலா ராஜேஷ் ரீச் ஆனார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பீலா ராஜேஷுக்கு பதிலாக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்துவருகிறார்.

நேற்று தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்த போது, பின்னால் நின்றுகொண்டிருந்த பீலா ராஜேஷ், இன்று பின்னால் கூட இல்லை. இந்நிலையில், இதுவரை செய்தியாளர்களை சந்தித்துவந்த பீலா ராஜேஷ் இல்லாமல் நீங்கள் செய்தியாளர்களை சந்திப்பது ஏன் என செய்தியாளர்கள், தலைமை செயலாளரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தால் சுகாதாரத்துறை தொடர்பான விஷயங்களையும் செயல்பாடுகளையும் மட்டுமே அப்டேட் செய்வார். ஆனால் நான் பல துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்காணித்துவருகிறேன் என்பதால், அனைத்து துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் என்னால் தெளிவுபடுத்த முடியும்.  அதனால் தான் நான் சந்திக்கிறேன் என்று தலைமை செயலாளர் சண்முகம் விளக்கமளித்தார்.