அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குடும்பிபிடி சண்டை நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் சசிகலா விரைவில் விடுதலை என்று தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தாண்டு ஆண்டு இறுதியில் நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் தீவிரமாக இறங்க இருக்கிறார் என்கிற தகவலும் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் ரஜினி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்.

"அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை. இதுதொடர்பான முடிவு மேலும் தள்ளிப்போகும். ஒற்றைத் தலைமை இருந்தால்தான் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் அதிமுக -பாஜக கூட்டணி தொடரும். ஏனெனில், இரு கட்சிகளும் வேறு வேறு இல்லை. அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல. இரண்டு கட்சிகளுக்கும் ஓரே சித்தாந்தம் தான்.

அமமுக- பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா எனக் கேட்டால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுதான் என் பதில். நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது தமிழக பாஜகவின் மாநிலத் தலைமையில் விருப்பமாகவும் இருக்கலாம். அதற்காக, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக பாஜக நிச்சயம் முன்னிறுத்தாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.