தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக திடீரென பின்வாங்கியிருப்பது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நீண்டஇழுபறிக்கு பிறகு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை அதிமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் தற்போது வரை வெளிப்படையாக வரவேற்கவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் உடனடியாக எந்த ரியாக்சனும் காட்டாமல் அமைதியாகவே இருந்தன.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் எடப்பாடி பழனிசாமியை திடிரென நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரில் சென்று தான் வாழ்த்து கூறியுள்ளதற்கு என்ன அர்த்தம் என்று அவர் பதில் கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றார்.

இதே போல் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றனர். ஆனால் எல்.முருகன் மட்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டது போலவே பேசி வந்தார். இந்த நிலையில் திடிரென செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றார். இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் எந்த அலட்டலும் இல்லாமல் இதற்கு பதில் அளித்தார்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சிக்கு மட்டும் அல்ல எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தான். இதனை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயக்குமார் செய்தியாளர்களை அழைத்து பேசினார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனோ, தமிழகத்தில் கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் போன்றவை குறித்தெல்லாம் பாஜக மேலிடம் தான் முடிவெடுத்து அறிக்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை எடப்பாடி பழனிசாமியை ஏற்றக் கொண்டது போல் பேசி வந்த எல்.முருகன் திடீரென இந்த விவகாரத்தில் டெல்லி மேலிடத்தை கை காட்டியுள்ளார். அதிலும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சென்னை வந்த சென்ற பிறகே எல்.முருகன் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதாவது, அதிமுக உடனான கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து யாரும் எந்த கருத்தும் கூறக்கூடாது என்று முருகனுக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து நேரடியாக உத்தரவு வந்ததாக சொல்கிறார்கள்.

இந்த விவகாரத்தை டெல்லி பாஜக மேலிடம் நேரடியாக கையாள்வதால் இனி இந்த விஷயத்தில் தலையை கொடுக்க கூடாது என்று எல்,முருகன் முடிவெடுத்துள்ளார். இதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எல்.முருகன் தன்னிச்சையாக செயல்படுவதாக தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லி தலைமையிடம் புகார் அளித்ததே என்றும் கூறப்படுகிறது. மேலும் கூட்டணி தொடர்பாக எல்லாம் எல்.முருகன் பேசுவதை இங்குள்ள சிலர் விரும்பவில்லை என்கிறார்கள். இதனால்தான் டெல்லி தலைமை மூலமாக முருகனுக்கு அவர்கள் கடிவாளம் போட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.