தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்து பாஜக அடம்பிடித்து வருவதன் பின்னணி தெரியவந்துள்ளது.

தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. ஆனால் பாஜக நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தொடர பாஜகவிற்கு யாரின் தயவும் தேவையில்லை. அதே சமயம் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. முக்கிய சட்டங்கள் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் பாஜகவிற்கு அதிமுக போன்ற கட்சிகள் தயவு தேவைப்படுகிறது. எனவே தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கொடுத்த 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.

ஆனால் சட்டப்பேரவை தேர்தலின் பாஜக தனது வியூகத்தை மாற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சொன்னதை பாஜக கேட்டது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை, நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்கிற ரீதியில் பாஜகவின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதிலும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் பெரிய கட்சி. கூட்டணியின் பெயர் வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருக்கலாம்.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் கட்சி அதிமுக தான். தொகுதி ஒதுக்கீடு முதல் தொகுதிப்பங்கீடு வரை அனைத்தையும் அதிமுக தான் மேற்கொள்ளும். இந்த இடத்தில் தான் பாஜக பிரச்சனை செய்கிறது. தொகுதி ஒதுக்கீடு, தொகுதிப்பங்கீட்டில் தங்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என்று பாஜக இடையூறு செய்கிறது. உதாணரமாக தேமுதிகவிற்கு 11 தொகுதிகள் என்று அதிமுக முடிவெடுத்து வைத்திருந்தால் அதனை அதிகரிக்கக வேண்டும் என்கிற பாஜக. அத்தோடு கூட்டணியில் சில புதிய உதிரிக்கட்சிகளையும் சேர்க்க பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த விஷயங்களில் அதிமுக இறங்கி வர மறுப்பதால் தான் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்காமல் பாஜக பிடிவாதம் காட்டி வருகிறது. அதோடு மட்டும் அல்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுமார் 41 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது- அப்போது தான் கணிசமான தொகுதிகளில் வென்று பாஜகவை தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியும் என்று அந்த கட்சி கருதுகிறது. ஆனால் பாஜகவிற்கு 21 தொகுதிகள் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. தாங்கள் கேட்கும் தொகுதியை கொடுத்தால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கத்தயார் என்று பாஜக புதிய நிபந்தனை விதித்துள்ளதாக சொல்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவில் இருந்து தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் கட்சி அதிமுக. அதோடு கூட்டணியில் மிகப்பெரிய கட்சி அதிமுக. எனவே இந்த விஷயத்தில் பாஜக பிடிவாதம் பிடிப்பது அர்த்தமற்றது என்று அதிமுக கருதுகிறது. மேலும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி அங்கு பாஜக வேட்பாளர்களை நிறுத்துவது அந்த தொகுதியை அப்படியே தங்கத்தட்டில் வைத்து திமுகவிடம் கொடுப்பதற்கு சமம். எனவே வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜகவிற்கு வழங்க அதிமுக தயாராகவே உள்ளது.

ஆனால் நிதர்சனத்தை புரிந்து கொள்ளாமல் பாஜக வீம்பு பிடிப்பது கூட்டணிக்கு நல்லதல்ல. அதாவது அதிக தொகுதிகளை பெறுவதற்கு முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக பிடிவாதம் பிடிப்பது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக திட்டவட்டமாக பாஜகவிடம் கூறிவிட்டது. இதுநாள் வரை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று எல்.முருகன் தான் கூறி வந்தார். ஆனால் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஒரு படி மேலே போய் தேர்தலில் வென்று பெரும்பான்மை பெற்ற பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூடி முதலமைச்சரை தேர்வு செய்யும் என்று கூறியது அதிமுகவை மிகவும் டென்சன் ஆக்கியுள்ளது.

இதனை அடுத்து இந்த விவகாரத்தை உடனடியாக அதிமுக தலைமை டெல்லி பாஜக தலைமையிடம் கொண்டு சென்றது. அதன் பிறகே தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி. எனவே அந்த கட்சியில் இருந்து தான் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய இயலும் என்று சி.டி.ரவி இறங்கி வந்துள்ளார். ஆனால் இதுவும் கூட தங்களுக்கு போதாது, முதலமைச்சர் வேட்பாளராக உடனடியாக தன்னை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.