தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக  ‘21 பொருட்கள்’ ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 

பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் தொகுப்பு பைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு,இதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்,பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன்களும் தேதி மற்றும் நேரம் வாரியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து,அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.