முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு இரண்டு முறை அஞ்சலி செலுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக் குறைவினால் காலமானார். அவருக்கு வயது 80. வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார். சுமார் 48 ஆண்டுகாலம் கலைஞர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதனின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு செய்தி கேட்டு உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்திய முதல்வர் முக ஸ்டாலின், நேற்று இரவு மீண்டும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்தினார்

தனது தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் தனது தந்தையின் நிழல் போல் இருந்தவர் என்பதாலும் சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இரண்டு முறை அஞ்சலி செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என நினைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவு செய்தி எனக்கு தீரா மனத்துயரத்தை ஏற்படுத்தி விட்டது. 

அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நினைக்கவில்லை. எந்த கூட்டத்தில் பேசினாலும் பேசி முடித்ததும் அவரது கருத்தை கேட்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். எனது மேடைப் பேச்சை திருத்துவார், பாராட்டுவார், உற்சாகப்படுத்துவார். அனைத்திலும் அவரது அன்பும், பாசமும் இருக்கும். கலைஞரை பிரிந்து சண்முகநாதனாலும் இருக்க முடியாது சண்முகநாதனை பிரிந்து கலைஞராலும் இருக்க முடியாது. 

உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி கலைஞரின் நிழலாக இருந்தவர். கலைஞரின் வரலாற்று பக்கங்கள் அனைத்தையும் எழுதும் தகவல் களஞ்சியம் சண்முகநாதன். உடன் பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களையும் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு அச்சில் இருக்கும் நிலையில், சண்முகநாதன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது. கோபாலபுரம் வீட்டின் வலதுபுற அறையில் கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பார். கலைஞர் மறைந்த பின்னும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத்திருத்தம் செய்வது என்று பணியாற்றியவர் சண்முகநாதன். கோபாலபுர குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முத்தமிழறிஞர் கலைஞரின் நிழல், அவரின் நீண்ட நெடிய வரலாற்றின் நேரடி சாட்சி. முதலமைச்சர் அவர்கள் மீதும் என்மீதும் பேரன்பு கொண்ட சண்முகநாதன் மாமாவின் மறைவு வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தினர்-கழகத்தினருக்கு ஆறுதல். சண்முகநாதன் மாமாவின் உழைப்பு என்றும் போற்றுதலுக்குரியது’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.