மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

மிக்ஜாம் புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயலின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. இடியொலியாக எதிர்கொண்டன சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும்! எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட ஆட்சியை நடத்தி வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும் கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்ட்டி மீட்டருக்கு மேல் என்பதால் சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4-ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான். 2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்துவிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது. 

ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்த சில மணிநேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான். அதே நேரத்தில், சென்னைப் புறநகரின் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும், கடல் மட்டத்துக்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியிருந்ததை அறிந்து, அங்குள்ள மக்களுக்கு உதவிடவும், அவர்களை மீட்கவும், அந்தப் பகுதியில் வெள்ளநீரை வடியச் செய்து, இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன. 

Scroll to load tweet…

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கழகத்தினர் கழகப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களில் ஒருவனான நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி - ஒன்றிய - நகர கழக அமைப்புகளின் நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து களப்பணியாற்றி மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். தண்ணீரை வெளியேற்றுவதற்கும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பதற்கும் கழக நிர்வாக அமைப்பினரும், சார்பு அணியினரும் முழுவீச்சில் பணியாற்றி, மக்களின் துயர் துடைத்தனர். மழை அளவையும் அதன் தாக்கத்தையும் கண்காணிப்பு அறைக்கு நேரில் சென்று அங்குள்ள அலுவலர்களிடமும், உதவிக்கான அழைப்பு விடுத்த பொதுமக்களிடமும் பேசிய உங்களில் ஒருவனான நான், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். 

அண்ணாநகர், அம்பத்தூர், ஆர்.கே.நகர், ஆவடி, உத்திரமேரூர், எழும்பூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், தாம்பரம், தியாகராயநகர், திரு.வி.க.நகர், திருத்தணி, திருப்பெரும்புதூர், திருப்போரூர், திருவள்ளூர், திருவொற்றியூர், துறைமுகம், பல்லாவரம், பூந்தமல்லி, பெரம்பூர், பொன்னேரி, மதுரவாயல், மதுராந்தகம், மயிலாப்பூர், மாதவரம், ராயபுரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், வேளச்சேரி என சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுபடுத்தினேன். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தேன். 

ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது, மக்களின் கோரிக்கைகள் உடனடியாக செவி மடுக்கப்படாதது போன்ற தகவல்களையும் கவனித்து, அங்கும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆவன செய்தது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆட்சியை வழங்கிய மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசு. டி.வியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்றோ, பங்களா வீட்டின் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றோ முந்தைய ஆட்சியாளர்களின் நிலைமை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அணுகமுடியும், கேள்வி கேட்க முடியும், நிவாரணம் பெற முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது. 

மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல. பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து, அதற்கானப் பணிகளை முன்னெடுத்துள்ளது. பேரிடரில் உயிர் இழந்தவர்களுக்கான நிவாரணம், மீனவர்களுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி அவற்றுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கையான பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முன்னிறுத்திய மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும். முந்தைய அடிமை ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்களமாக நிச்சயம் அமைந்திடும். 

அந்தக் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, சேலத்தில் தம்பி உதயநிதி தலைமையில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது. பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம்! களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திடீரென குறைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோ கணக்கில் அள்ளி சென்ற பொதுமக்கள்