இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7600ஐ கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ள பாதிப்பு எண்ணிக்கை இன்று 969ஐ எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கு மருத்துவமனைகளை அதிகப்படுத்துதல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துதல் என மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதுதொடர்பாக பிரதமர் மோடியுடனான ஆலோசனை முடிந்த பின்னர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் பழனிசாமி. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய பணிகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில், சமூக பரவல் குறித்து மத்திய, மாநில அரசுகள் முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பதாகவும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை ஆகிய தகவல்களில் முரண் இருப்பதாகவும், ஒளிவுமறைவின்றி பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் நிலைமை மோசமாகி கொண்டே செல்வதால், தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை முதல், பிரதமருடனான ஆலோசனை, அதன்பின்னர் அமைச்சரவை கூட்டம் என பிசியாக இருந்த முதல்வர் பழனிசாமி, அவையெல்லாம் முடிந்தவுடன், ஸ்டாலினின் கடிதத்திற்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சி துணை தலைவரே, அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ள நிலையில், ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டு, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்றோரின் உழைப்பை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எனக்கு வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.