கொரோனா அச்சுறுத்தலால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதுகுறித்த ஆலோசனைகளும் நடந்துவருகின்றன.

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின் தங்கிய அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிகள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு சலுகைகளும் அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

விவசாயிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள், பழங்களை விளையவைத்திருக்கும் விவசாயிகள், ஊரடங்கின் விளைவாக அவற்றை விற்க முடியாமல் தவித்துவருகின்றனர். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட சில நாட்களுக்கு விற்கவில்லையென்றால் அவையனைத்து வீணாகிவிடும். அதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தையும் பாதிப்பையும் சந்திக்க நேரிடும். 

அவற்றை அரசு குளிர்சாதன கிடங்குகளில் கட்டணம் செலுத்தி வைத்து பாதுகாப்பதற்கு விவசாயிகளிடம் பணம் இருக்குமா என்பது சந்தேகம். நாடே இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சூழலில் விவசாயிகளை கஷ்டப்படுத்த முடியாது. கஷ்டப்படுத்தவும் கூடாது. 

எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளில் விளைபொருட்களை கட்டணம் செலுத்தாமல் வைத்துக்கொள்ளலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு குளிர்சாதன கிடங்குகளில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் விளைபொருட்களை ஏப்ரல் 30ம் தேதி வரை கட்டணம் செலுத்தாமல் வைத்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.