இந்தியாவில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2215 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவுள்ளது. 

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கும் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, செய்யப்பட வேண்டிய தளர்வுகள், மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகள், மாநிலங்களில் கொரோனாவின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வர் பழனிசாமியும் பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் கலந்துகொண்டார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது, பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடியை விடுவிக்குமாறு ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை மறுபடியும் விடுத்தார் முதல்வர் பழனிசாமி. மத்திய அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.312 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட ரூ.2000 கோடியை விடுவிக்குமாறு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். 

மேலும், குறிப்பிட்ட அளவிலான ரயில் சேவையை நாளை முதல் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் சென்னைக்கு எந்த ரயிலையும் மே 31ம் தேதி வரை இயக்க வேண்டாம் எனவும் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அந்த ஆலோசனையின்போது, தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 0.67% என்ற குறைந்தளவில் இருப்பதை சுட்டிக்காட்டினார் முதல்வர் பழனிசாமி.