திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மனவேதனையில் இருந்த திமுக தொண்டர்களை, முதல்வர் கூறிய தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் திமுக தொண்டர்கள் அங்கு பெருமளவில் திரண்டுள்ளனர். 

நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மனமுடைந்த தொண்டர்கள், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீரடைந்தது என்றதும் சற்று ஆறுதல் அடைந்தனர். விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், அதிகாலையில் சற்று கலைந்து சென்றனர். மீண்டும் காலை முதல் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

இதற்கிடையே சேலத்தில் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார். காலை 10 மணியளவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோரும் வந்திருந்தனர்.

கருணாநிதியை பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. நானும் துணை முதல்வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் சேர்ந்து கருணாநிதியை நேரில் பார்த்தோம். நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு கவனித்துவருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.