தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துடன் 9ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கிய பின் மாதந்தோறும் ஆளுநரை சந்தித்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளித்து, தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கமும் அளித்து வருகிறார். 

அந்த வகையில் இன்று மாலை ராஜ்பவனில் ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்தும் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த நாட்டிற்குமே தமிழக அரசு கொரோனா தடுப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியது குறிப்பிடதக்கது.