காவிரியில் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்துவருகிறது. தமிழத்திலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. 

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் அணைகள் நிரம்பி, கர்நாடக அணைகளிலிருந்து 2.20 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், மேட்டூரில் இருந்து நொடிக்கு 1.65 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

காவிரியில் தண்ணீர் விரைவாக ஓடி வருவதால் டெல்டா மாவட்ட கரையோர பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதில் கரூர், நாமக்கல், பவானியில் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

காவிரியில் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அணைகள் நிரம்பிவருவது குறித்தும் கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.