பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இன்று முதன் முறையாக அண்ணா பிறந்த நகரான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். முதலமைச்சரின் வருகையை அடுத்து முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அவரது வழிநெடுகிலும் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. காஞ்சி நகரம் முழுவதுமே போலீசார் தீவிர பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது. 

பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக, தற்போது தான் வாய்ப்பு கிடைத்தது. திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த இல்லத்திற்கு வந்து அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 

அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கக்கூடிய இந்த நேரத்திலே குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன் 'மக்களிடம் செல்; மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்; மக்களுக்குப் பணியாற்று' என்ற அறிவுரையைத் தம்பிமார்களுக்கு எப்போதும் அவர் வழங்கிக்கொண்டிருப்பவர். எனவே அதை நினைவுபடுத்தி குறிப்பேடு புத்தகத்திலேயே அவர் தந்த அறிவுரைப்படி ஆட்சி வெற்றிநடை போடும் என்று உறுதியோடு தெரிவிக்கும் வகையில் நான் அதை எழுதியிருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.