Chief Minister Edappadi said that there is no connection between the state and the income tax department.
சசிகலா குடும்பம் செய்த தவறே வருமான வரிசோதனைக்கு காரணம் எனவும் மாநில அரசுக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதைதொடந்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா குடும்பம் செய்த தவறே வருமான வரிசோதனைக்கு காரணம் எனவும் மாநில அரசுக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோயிலாக பாவிக்கிறோம் எனவும் அதனால் தான் போயஸ்கார்டனை நினைவிடமாக்க நினைக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
