Chief Minister Edappadi Palanisamy today with Chief Ministers MLAs and party executives
அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பொதுக்குழு கூட்டுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் சபாநாயகர் அனுப்பிய நோட்டிஸுக்கு பதில் அளிக்க மாட்டோம் எனவும் தினகரன் தரப்பு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு இன்று எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 200 பேர் கலந்துகொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
