தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவதோடு சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். மேலும், பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாளை நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே விமானத்தில் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் பயணம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும். பயணத்தின் போது இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வார்களாக என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.