chief Minister edappadi palanisamy speak about rajinikanth
புதுசு, புதுசா கட்சி தொடங்கிட்டு , காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு குறித்து கருத்து சொல்கிறார்களே என நடிகர் ரஜினிகாந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செமையாக கிண்டல் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஒரே கனவு என்று பேசினார்.
நான் கண் மூடுவதற்குள் நதிகள் இணைப்பு என்பது சாத்தியப்படவேண்டும் என அந்த கூட்டத்தில் ரஜினி பேசினார். இதே போல் நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி துவங்குகிறார்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க சொல்கிறார்கள். ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இப்போது முளைத்துள்ள தலைவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் அ.தி.மு.க.,தான் என்றார்.
ரஜினிகாந்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
