தேமுதிக துவங்கி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முதல்முறையாக அந்த கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் ஒருவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திருப்பூரில் நேற்று முன்தினம் தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கேப்டன் பேசினார். வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே கேப்டன் பேசினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பேசிய 2 நிமிட பேச்சு என்பதால் அது வைரல் ஆனது. தேமுதிக தொண்டர்களும் கேப்டன் குரலை கேட்டு உற்சாம் அடைந்தனர். இப்படி சென்டிமெண்டாக தேமுதிக பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருந்தாலும் அரசியல் ரீதியாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

அதில் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தேமுதிக எனும் கட்சியை திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிரான ஒரு கட்சியாகவே துவங்கி வளர்த்தெடுத்தார் கேப்டன். இடையே 2011ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணிவைத்தாலும் கூட அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை.

இதே போல் ஜெயலலிதாவை புகழ்ந்து கேப்டன் எங்கும் பேசவில்லை. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்பதோடு 2011 தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். மேலும் திமுகவிற்கு எதிரான பேச்சுகள் தான் அப்போது கேப்டன் பிரச்சாரத்தில் தூள் பறந்தது. 

இப்படி ஜெயலலிதாவிற்காக கூட கேப்டன் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தனது அரசியல் நகர்வுகளை தீர்மானித்தார். ஆனால் திருப்பூர் தேமுதிக பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அந்த பாதையில் இருந்து தேமுதிக விலகிவிட்டதை அப்பட்டமாக காட்டியது. வெளிநாடு சென்று திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைநிறைய முதலீடுகளோடு வந்திருப்பதாகவும் இதற்காக தேமுதிக அவரை பாராட்டுவதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு தேமுதிகவின் எந்த கூட்டத்திலும் தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருப்பவர்களையோ அல்லது முதலமைச்சர்களையோ பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில்லை. அந்த வகையில் தேமுதிக வரலாற்றில் முதல்முறையாக பாராட்டு பெற்ற முதலமைச்சர் என்கிற பெருமை எடப்பாடியாருக்கு கிடைத்துள்ளது.