டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. 

திமுக இரு அணிகளாக செயல்பட்டபோது, தற்காலிகமாக சின்னமும் கட்சி பெயரும் முடக்கப்பட்டது. பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தபிறகு, அவர்களுக்கே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.

அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால், அவர்களுக்கு முந்திகொண்டு உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பார்த்தது போல் முதலமைச்சர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.