திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் என்றும் இராஜேந்திரபாலாஜி பக்திமான் என்று அமைச்சர்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனியமுடியவில்லை ஆப்ரேசன் செய்திருக்கிறார் அதனால் தான் அமைச்சர் சிறுவனை அழைத்து அப்படி செய்திருக்கிறார்.அதை ஊடகங்கள் பெரிதாக்குவது வேதனையளிக்கிறது என்று சேலம் செல்லுவதற்காக கோவை விமானம் நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.


திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்து அவரது காலில் உள்ள செருப்பை கழற்றச் சொன்ன விவகாரம் ஊடகங்களிலும் வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஒத்து ஊதுவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் “ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பில் செடி கொடிகள் மாட்டிக்கொண்டதால் அதை எடுப்பதற்காக அந்த சிறுவனை அழைத்திருக்கிறார். அதை ஊடகங்கள் பெரிதாக ஊதிவிட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டியிருந்தார்.


இந்த சம்பவத்தை பழங்குடியின சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருத்ததோடு இல்லாமல் அந்த பையனின் குடும்பதாரை போலீசில் புகார் கொடுக்க வைத்தார்கள். இந்த விசயம் பூதாகரமாக கிளம்புவதற்குள் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். 
முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது.. டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள்  திண்டுக்கல் சீனிவாசன் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த முதல்வர்..” டிஎன்பிஎஸ்சி ஓர் தன்னாட்சி அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகின்றது.தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று தான் இந்த அரசு விரும்புகிறது.


அமைச்சர் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயது 70. வயது முதிர்வின் காரணமாக அவரால் குனியமுடியவில்லை. அவர் செருப்புக்கும் காலுக்கும் இடையே குச்சி சிக்கிக்கொண்டது. அதனால் தான் உதவிக்கு அந்த சிறுவனை அழைத்திருக்கிறார். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து விட்டார். ஆனாலும் ஊடகங்கள் அதை பெரிதாக்குவது வேதனையளிக்கிறது.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எனக்கு தெரிந்தவரை ஓர் பக்திமான். அவர் சொல்லுவதெல்லாம் அவர் சொந்த கருத்து.அதற்கும் அதிமுகவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கான விளக்கத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்று விளக்கமளித்தார்.

TBalamurukan