தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அமைச்சர் துரைக்கண்ணு மறைவு மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.அவரது குடும்பத்தினருக்கு மட்டும் இன்றி எனக்கும், அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். எனது அமைச்சரவையில் திறம்பட பணியாற்றி மக்கள் நன்மதிப்பை பெற்றவர் துரைக்கண்ணு’ எனத் தெரிவித்துள்ளார்.