காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம் கூறி வருகின்றனர்.

மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
தமிழக அரசு சார்பில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,
பொதுப்பணித்துறை செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதா? அல்லது அடுத்தகட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அதிமுக எம்.பி.க்கள் குமார், அருண்மொழித்தேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நவநீதகிருஷ்ணன் ஏன் மாநிலங்களவையில் தற்கொலை செய்வோம் என்று பேசினார்? உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அதற்காக இப்படியா பேசுவது?
வருத்தமாக இருக்கிறது. என்ன பேசப்போகிறோம் என்பதை தம்பிதுரையிடம் ஆலோசிக்கிறாரா இல்லையா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், எங்களுக்கு அதுதான் அதிர்ச்சியாக உள்ளது. மற்றவர்களை கலந்தாலோசிக்காமல் இப்படி திடீரென்று பேசி விட்டார். அது குறித்து அறியத்தான் உங்களை சந்திக்க வந்தோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன, மாநில அரசு என்ன செய்யலாம் என்று மற்ற
அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறி அனுப்பி வைத்துள்ளாராம்.