தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் அன்றாடம் சம்பாதிக்கும், 45 கோடி மக்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 30 கோடி மக்கள் சுயதொழில் செய்பவர்கள். 15 கோடி பேர், தினக்கூலி தொழிலாளிகள். அனைவரும், ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகின்றனர்.
கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். கள்ள பணத்தை தடுக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை.

விவசாயிகளுக்கு, வருமான வரி கிடையாது. கரும்பு விவசாயத்தில், ரூ.2 லட்சம் வருமானம் கிடைத்தால், வருமான வரி கட்ட வேண்டிய அவசியமில்லை. கோவில் உண்டியலில் இருக்கும் பணம், கறுப்பு பணமல்ல. மலைவாழ் மக்கள், வருமான வரி கட்ட தேவையில்லை.
ஒரு விவசாயியிடம், ரூ.5,000 வெள்ளை பணம் இருக்கிறது. அந்த விவசாயி, டாக்டரிடம் சிகிச்சை பெற்று, 2,000 ரூபாயை, கட்டணமாக தருகிறார். டாக்டர், ரசீது தரவில்லை. அந்த டாக்டர், தன் குடும்பத்தினருடன்
ஓட்டலுக்கு சென்று, விவசாயி தந்த, 2,000 ரூபாயில் சாப்பிடுகிறார்.
டாக்டர் கொடுத்த பணத்திற்கு, ஓட்டல் நிர்வாகம் ரசீது வழங்குகிறது. அந்த ஓட்டல் நிர்வாகம், டாக்டர் வழங்கிய கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுகிறது. இப்படி தான், நாட்டில் கறுப்பு பணம், வெள்ளை பணமாக மாறுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

உண்மையான கணக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், 'சீட்' தருவதற்கு, மாணவரின் பெற்றோரிடம், ரூ.25 லட்சம் நன்கொடை கேட்கிறது. பெற்றோர், 'செக்' கொடுக்க விரும்பினாலும், ரொக்கமாக கேட்கிறது. இதனால், பெற்றோரும், தங்கள் சொத்தை விற்கும் போது, 60 சதவீத பணத்தை வெள்ளையாகவும், மீதியை கறுப்பாகவும் வாங்கி, கறுப்பு பணத்தை கல்லூரிக்கு தருகின்றனர்.
சொத்துக்களை வாங்குவோரும், விற்பவரும் உண்மையான கணக்கை காட்ட மாட்டார்கள். இப்படி தான், கறுப்பு பணம் உருவாகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும்.
அதேபோல், கள்ளநோட்டுகளை ஒழிப்பதும் கஷ்டம். புதிய நோட்டு அடித்தாலும், ஓராண்டில் கள்ள நோட்டு புழக்கத்திற்கு வந்துவிடும். எனவே, பணத் தட்டுப்பாடு விவகாரம், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்து விடாது. இன்னும், 6 மாதத்துக்கு தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
